உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்?
- 1stopview Vasanth
- Dec 24, 2022
- 2 min read
உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்?
பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுததும் ஆன்டிஜென்கள் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவது நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வேலை. இதில் முக்கியமானது வெள்ளை இரத்த அணுக்கள். இவை, நம் உடலில் புகும் தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை தாக்கி, உடலை ஆரோக்கியமாக பராமரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க சரியான ஊட்டச்சத்து முக்கியமானது.
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் வலிமையை அதிகரிக்கின்றன. இதன் மூலம் நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான சக்தியை பெறுகிறது.
புதிய வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க நம் உடல் நாம் உண்ணும் உணவில் உள்ள புரதத்திலிருந்து சில பொருட்களைப் பயன்படுத்துகிறது. மீன், முட்டை, கோழி, இறைச்சி, பால், தயிர் மற்றும் சுண்டல், பருப்பு வகைகளில் தரமான புரதம் கிடைக்கிறது.
உணவில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களில் ஒரு வகையான பாகோசைட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இவை உடலில் புகுந்த தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைச் சுற்றிப் படர்ந்து செயலிழக்க வைப்பவை.
புற்று நோயாளிகள் கீமோதெரபி எடுக்கும் போது இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணக்கை குறைவதுண்டு. இந்த(2022) ஆண்டில், புற்றுநோய் தொற்றுநோயியல், பயோமார்க்ஸ் மற்றும் தடுப்பு ( Cancer Epidemiology, Biomarkers and Prevention) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உணவு கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொண்ட தன்னார்வலர்களின் வெள்ளை இரத்த அணுக்களின் அளவுகள் அதிகரித்ததுடன், பி செல்கள் எனப்படும் ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டன எனத் தெரிய வந்துள்ளது. எனவே, ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகளான ஆளிவிதை எண்ணெய், சியா விதைகள், மீன் எண்ணெய், அக்ரூட் பருப்புகள், சிப்பிகள், சால்மன், கீரை மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நமக்கு தெரியும். கிரீன் தேநீரில் உள்ள எல்-தியானைன் என்ற அமினோ அமிலம், டி-செல்களில் கிருமி-எதிர்ப்பு சேர்மங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
அடுத்ததாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு ஒரு முக்கியமான உணவு. வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இயற்கையான நோய்க்கிருமிகளை அழிக்கும் செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது. தவிர, இதில் கந்தகம் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியையும், வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது. பூண்டில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் அதிக வைட்டமின் சி ஆகியவை ஒரு சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பதாகவும், வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஒரு ஆய்வு காட்டுகிறது. தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளை அணுக்களின் திறனை மேம்படுத்துவதோடு மற்ற நோயெதிர்ப்பு செல்களையும் அதிகரிக்கிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) நிறைந்துள்ளதால் நோய் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இந்த வைட்டமின்கள் போதுமான அளவு உட்கொள்வதை உறுதி செய்ய, ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 வகையான காய்கறிகள்+பழங்களை சாப்பிட வேண்டும். அதிக அளவு வைட்டமின் சி கொண்ட காய்கறிகளில் அனைத்து வகையான மிளகாய், கீரைகள், பிரஸ்ஸல்ஸ் முளைகள், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் சி நிறைந்த பழங்களில் கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள்மற்றும் முலாம்பழம் ஆகியவை அடங்கும். முக்கியமாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ள பப்பாளிப் பழம் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் அல்லது லிம்போசைட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இதில் உள்ள பப்பைன் என்ற செரிமான நொதி, அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. அதனுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள் பீட்டா கரோட்டின் தொற்று-எதிர்ப்பு செல்கள் மற்றும் டி-செல்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதுடன், வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் கேரட், பூசணி வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை. ஆப்ரிகாட் மற்றும் மாம்பழங்கள் பீட்டாகரோட்டின் நிறைந்த பழங்களாகும்.
கொட்டைகள் மற்றும் விதைகள் வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் ஆதலால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால், புற்றுநோய் செல்கள் மற்றும் கிருமிகளை அழிக்க உதவும் குறிப்பிட்ட செல்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்காக உருவாகும் பி-செல்களின் உற்பத்தியும் வைட்டமின் ஈ மூலம் அதிகரித்து கிருமிகளை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை உருவாக்க உதவுகிறது. இவை பாக்டீரியாக்களை கொல்ல உதவுகின்றன. தினசரி வைட்டமின் ஈ அளவைப் பெற பாதாம், வேர்க்கடலை வெண்ணெய், சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற உணவுகளை உண்ண வேண்டும்.
நம் உணவில் இவை இடம் பெறாவிடில் அல்லது சாப்பிடுவதில் சிக்கல் இருந்தால், உணவு நிபுணரின் ஆலோசனை பெற்று வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் கொண்ட மல்டிவைட்டமின் அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம்.வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உடலுக்கு இந்த இரண்டு வைட்டமின்கள் தேவை. உணவே மருந்து!
படம்: இணையம்
அடிக்குறிப்பு:
Healthline: Medical information and health advice you can trust.
We're committed to being your source for expert health guidance. Come to us in your pursuit of wellness.
Comments